தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மலையாள சினிமாவில் உருவான நிலையில் அந்தப் படம் மொழிகளை தாண்டி உலக அளவில் பல ரசிகர்களை கவர்ந்து 200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா தரப்பில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது அந்த படத்தில் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடலுக்கு இளையராஜாவிடம் உரிய அனுமதி வாங்காமல் படத்தில் பயன்படுத்திய காரணத்திற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்  என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.