நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமான நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து (57) சென்னையில் மாரடைப்பால் காலமானார். டப்பிங் முடிந்து சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பிய போது மாரடைப்பால் காலமானார் மாரிமுத்து. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும்,  விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார் மாரி முத்து.

பரியேறும் பெருமாள், விக்ரம் உள்ளிட்ட படங்களின் நடித்த மாரிமுத்து ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். தமிழில் யுத்தம் செய், கொம்பன், மருது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மாரிமுத்து. பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து மக்களின் இல்லங்களில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து.

பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகியின்  தந்தை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பேசப்பட்டவர் மாரிமுத்து. தேனியைச் சேர்ந்த மாரிமுத்து ராஜ்கிரன் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து அசத்தினார்.. மாரிமுத்துவின் இறுதி சடங்கு சொந்த ஊரான தேனியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.” என தெரிவித்துள்ளார்.