தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து விதை வங்கியாக பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை இனத்த தூய்மையுடன் சேகரித்து பாதுகாப்பாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முதல் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஒரு விதை வங்கிக்கு அதிகபட்சம் மூன்று லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தில் பயனாளி ஒருமுறை மட்டுமே பயன்பெற முடியும்.

மேலும் விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை விதை வங்கியில் இனத்தூய்மையுடன் பராமரிக்க வேண்டும் எனவும் விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் நல்ல முளைப்பு திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து அக்ரிஷ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.