2023 உலகக் கோப்பையில் இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் அறிவித்துள்ளார்.

2023 உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனிடையே போட்டிக்கு முன்னதாக, கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், உலகக் கோப்பை கோப்பையுடன் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை அடைந்தார். பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களைப் போலவே, சச்சினும் 2023 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு செல்லும் 4  போட்டியாளர்களை அறிவித்துள்ளார்.

இந்த 4 அணிகளும் அரையிறுதியில் விளையாடலாம் :

2023 உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியாளர்களாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ள 4அணிகள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகும். சச்சின் இந்த 4 அணிகளில் நியூசிலாந்து மீது  நம்பிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இது வரையில் முன்னாள் வீரர்களின் கணிப்பில் பெரும்பாலும் 4வது அணியாக பாகிஸ்தானை தேர்வு செய்துள்ளனர். ஆனால் சச்சின் நியூசிலாந்துக்கு இடம் கொடுத்துள்ளார்.

சச்சின் கணிப்பு எப்படி?

சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ள 4 அணிகளில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடி ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை வென்று அபார பார்மில் உள்ளது. அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் ஃபார்மில் உள்ளனர். எனவே, அரையிறுதிக்கு மட்டுமல்ல, பட்டத்துக்கான போட்டியாளராக இந்தியா கருதப்படுகிறது.

இங்கிலாந்து முன்னாள் சாம்பியன்கள், சமீப ஆண்டுகளில் அவர்கள் விளையாடிய கிரிக்கெட் மற்றும் அவர்களிடம் உள்ள வீரர்களை கருத்தில் கொண்டு, அவர்களும் அரையிறுதிக்கு வருவது உறுதி என்றே கணிக்கப்படுகிறது. பெரிய ஐசிசி நிகழ்வுகளில் ஆஸ்திரேலியா சிறப்பாகச் செயல்படும் என்பதால், அந்த அணியை அனைவருமே தேர்வு செய்துள்ளனர். அதேசமயம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆடியதை பார்க்கும் போது அரையிறுதிப் போட்டியாக தேர்வு செய்துள்ளது நியாயமானது. 

எந்த அணிக்கு எத்தனை கோப்பைகள் உள்ளன?

சச்சின் டெண்டுல்கர் அரையிறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்துள்ள 4 அணிகளில், நியூசிலாந்து மட்டுமே இதுவரை உலகக் கோப்பையை வெல்லவில்லை, ஆனால் 2015 மற்றும் 2019 உலக கோப்பையில் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது தான் சுவாரஸ்யம். இந்தியா 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது (1983, 2011) , ஆஸ்திரேலியா 5 முறை (1987, 1999, 2003, 2007, 2015) மற்றும் இங்கிலாந்து ஒரு முறை (2019).