பிரதமர் மோடி கடந்த 2018 -ஆம் ஆண்டிலிருந்து பரிக்ஷா இ சர்ச்சா என்னும் பெயரில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் எவ்வாறு தேர்வு பயம் போக்குவது? அதிலிருந்து மீள்வது எப்படி? மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதுவது பற்றிய ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்குவார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான பரிக்ஷா இ சர்ச்சா நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வு பற்றி கலந்துரையாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பல்வேறு விதமான கேள்விக்கு பிரதமர் மோடி நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் பதில் அளித்து பேசி உள்ளார்.

அந்த வகையில் ஒரு மாணவரின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அதாவது என்னுடைய தேர்வு முடிவுகள் சிறப்பாக இல்லாத போது எப்படி என் குடும்ப சூழலை சமாளிக்க முடியும் என அந்த மாணவர் பிரதமிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு குடும்பத்தில் எதிர்பார்ப்புகள் என்பது இயல்பானது தான். ஆனால் சமூக அந்தஸ்துக்காக அந்த எதிர்பார்ப்புகள் இருந்தால் ஆரோக்கியமானது அல்ல என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேர்வினால் வரும் மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி என்பது ஒரு மாணவி கேள்வி எழுப்பியுள்ளார். அதுக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசிய போது, முதல் பந்திலையே என்னை அவுட்டாக்க பார்க்கிறார் என பிரதமர் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். அதாவது தேர்வில் மாணவர்களிடம் பெற்றோர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இயற்கையானது தான். ஆனால் எதிர்பார்ப்புகளை பற்றி மாணவர்கள் கவலைபடாமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு மதிப்பெண் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் தங்கள் நேரத்தையும் படைப்பாற்றலையும் நல்ல முயற்சியில் பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் குறுக்கு வழிகளை நாம் ஒருபோதும் தேர்வு செய்யக்கூடாது. நம் மீது கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார். பிரதமர் மோடியின் பதிலுக்கு மாணவ, மாணவிகள் கைதட்டி ரசித்துள்ளனர்.