திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தீபக் ராஜா (30) கடந்த 20-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதாவது இவர் தன்னுடைய வருங்கால மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே உள்ள சாலையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இவர் ஹோட்டலை விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாறியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி  தேடி வந்தார்கள். இதற்கிடையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் தீபக் ராஜா உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டம் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து நவீன் மற்றும் முருகன் உட்பட மேலும் 4 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் 7 நாட்களுக்குப் பிறகு இன்று தீபக் ராஜாவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவடைந்து தீபக் ராஜாவின் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்கள் வாகைகுளம் வரை ஊர்வலமாக அவரின் சடலத்தை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். மேலும் இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.