நியோமேக்ஸ் மோசடி வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி மோசடி செய்த நியோமேக்ஸ் நிறுவன வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி கே கே ராமகிருஷ்ணன், ஒரு கடுமையான எச்சரிக்கையை அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார். அதாவது விசாரணை அதிகாரிகள் முறையான  விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகளின் தொலைபேசி தொடர்புகள் தேவைப்படும் பட்சத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். முக்கியமான குற்றவாளிகள் விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணை முறையாக நடைபெறாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் என்ற பிரபல நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பெயர்களில்  நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் என்பது தமிழக முழுவதும் உருவாக்கப்பட்டு, பல மடங்கு வட்டி தருவதாக கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட இந்த வழக்கு என்பது பாளையங்கோட்டை, திருச்சி, தஞ்சை, கோவில்பட்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட கிளைகளை நிர்வகிக்கும் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கிய நிர்வாகிகளாக இருக்கக் கூடிய சைமன் ராஜா,கபில், பத்ம நாபன் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த கௌதமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். ஒரு கோடி ரூபாய் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். மத்திய அரசின் நிறுவனங்களில் திட்டங்கள் வரவுள்ளது. எனவே இதில் இணைந்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினர்.

ஆனால் கூறியபடி பணம் வழங்கவில்லை, முதலீட்டார்களின் பணத்தை கல்லூரிகள், வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர். எனவே மோசடியில் ஈடுபட்ட இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களோடு இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் சிலர் ஒருதலையாக இருப்பதாக சந்தேகம் வருகிறது என்று கூறி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முக்கிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யப்படவில்லை,  கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமினில் வெளிய வந்துள்ளனர் என தெரிவித்தார். அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீபதிபதி, விசாரணை அதிகாரிகள் முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகளின் தொலைபேசி தொடர்புகள் தேவைப்படும் பட்சத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். முக்கியமான குற்றவாளிகள் விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும் விசாரணை முறையாக நடைபெறாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கௌதமி என்பதை தொடர்ந்த வழக்கை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.