லியோ திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுப்பது தான் ஐமேக்ஸ் தொழில்நுட்பம். இந்த ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்கள் ஐ மேக்ஸ் கேமராக்களில் ஷூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஐமேக்ஸ் சான்றிதழ் அளிக்கப்பட்ட கேமராக்களில் ஷூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுவும் இல்லையெனில், படம் ஷூட் செய்த பிறகு ஐமேக்சில் பிரத்தியேகமாக திரையிடப்படுவதற்கான வடிவமைப்பில் ரீ மாஸ்டர் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் 20க்கும் குறைவான படங்களே ஐமேக்சில் திரையிடப்பட்டுள்ளன. தமிழில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் imax திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஐமேக்ஸ் என்பது இயக்குனர்களின் உச்சபட்ச கனவாகும். தாங்கள் படைக்கும் படைப்பை பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்துடன் கடத்த எல்லா படைப்பாளிகளும் விருப்பப்படுவர். அதே சமயம் ஐமேக்ஸ் கேமராவில் படம் எடுப்பதென்பது அதீத பொருட் செலவை ஏற்படுத்தும் என்பதால், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கும் இயக்குனர்கள் தயங்குவர்.

தன் படைப்பின் மீது முழு நம்பிக்கை கொண்டு தான் எடுக்கும் அத்தனை படங்களிலும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை தைரியமாக பயன்படுத்தும் ஒரே இயக்குனர், ஐமேக்ஸ் கேமராவின் வல்லுனர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் மட்டுமே. அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படம் ஐமேக்ஸ் சான்றிதழ் பெற்ற கேமராக்கள் மூலம் சூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், லியோ பட குழு imax திரையில் படத்தை வெளியிட திட்டமிடுவதாக சினிமா வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. தளபதி விஜய் அவர்களின் முதல் imax படமாக லியோ அமைந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.