தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களை நியமிக்கும் பணிகள் வேகம் எடுத்து வருகிறது. அதாவது தலைமை செயலாளர் இறையன்புவின் பணி காலம் நிறைவடைந்தாலும் அவரை ஏதேனும் ஒரு பொறுப்பில் அமர வைத்து அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்திருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் தலைமையில் இயங்கக்கூடிய பதவிகள் சில இருக்கிறது. அவற்றில்  இறையன்புவுக்கு எந்த பதவியை கொடுப்பார்  என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே கோட்டை வட்டாரங்களில் நிலவி வருகிறது.

அந்த வகையில் தலைமைச் செயலாளர் பதவியில் இருக்கும் இறையன்புவிற்கு குறைவான பதவி வழங்கி விடக்கூடாது. மேலும் அவரது அனுபவம் தேவைப்படும் துறை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மாநில தகவல் ஆணையர் பதவி அவருக்கு வழங்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள் வழங்குவது, அனைத்து துறை சார்ந்த தரவுகளை கணினி மையப்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை தகவல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் கடந்த சில மாதங்களாகவே பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. மேலும் தலைமை ஆணையகராக இருந்த‌ ராஜகோபால் அவருக்கு கீழ் இயங்கிய தகவல் ஆணையர்கள் பணி காலம் நிறைவடைந்துள்ளது.

தற்போது அந்த இடத்தில் பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுக்கும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அக்பர் அலி டீம் தயார் செய்து தகுதியான நபர்களின் பட்டியலை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பட்டியலில் இறையன்புவின் பெயர் இடம் பெற்று இருப்பதாக கூறுகின்றனர். இந்த பட்டியலில் உள்ளவர்களில் இருந்து தலைமை தகவல் ஆணையர், பிற தகவல் ஆணையர்களை தேர்வு குழு தேர்வு செய்யும். அதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் இடம்பெறுகின்றனர். வருகிற மார்ச் மூன்றாம் தேதி இந்த குழு தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் அதன் பின் அவர்களை தமிழ்நாடு ஆளுநர் நியமனம் செய்வார்.

இந்த தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது தேர்தல் ஆணையர் பதவிக்கு சமமானது. அதேபோல் பிற தகவல் ஆணையர்களின் பதவி தலைமை செயலாளர் பதவிக்கு நிகரானது. வருகிற மார்ச் மூன்றாம் தேதி தேர்வு குழு கூடி  ஆணையர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஆளுநர்கள் அவர்களை நியமனம் செய்வார். இறையன்புவின் பனிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடை இருக்கின்ற நிலையில் விரைவில் அவர் தலைமை தகவல் ஆணையராக பதவி ஏற்பார் எனவும் புதிய தலைமை செயலாளராக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.