நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் திறப்பதற்கு தமிழகத்தில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு விதிமுறைகளை தீயணைப்புத்துறை விதித்துள்ளது. அதன்படி பட்டாசு கடைகள் வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பிறகு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெடிபொருள் சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடையின் இரண்டு பக்கமும் வழி கட்டாயம் இருக்க வேண்டும். கட்டடத்தில் மின்விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டாசு கடைகளில் வேறு பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது. ஒரு பட்டாசு கடைக்கும் மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. இங்கு புகை பிடிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை விளம்பர பலகையை அனைத்து பட்டாசு கடைகளில் முன்பும் கட்டாயம் வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.