சென்ற வெள்ளிக்கிழமை மத்திய அரசானது குறிப்பிட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டிற்கானது ஆகும். நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி சில திட்டங்களின் வட்டி விகிதங்களை அதிகரித்தி வரும் நிலையில், தற்போது சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுகிறது.

சிறுசேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இப்போது 20 பிபிஎஸ் மற்றும் 110 பிபிஎஸ் வரம்பில் உயர்வுகள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அதிகரிப்பு ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது. தற்போது அரசு அதிகரித்துள்ள வட்டி விகிதங்களின் படி, தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) 6.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் ஆகவும், மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் 7.6%ல் இருந்து 8% ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

அதே நேரம் பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்) மீதான வட்டி விகிதங்களில் அரசு எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வட்டி விகிதம் தொடர்ந்து 7.1 சதவீதமாக தான் இருக்கிறது. அத்துடன் 1 -5 வருடங்கள் வரையிலான அஞ்சல் அலுவலக டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் 1.1% புள்ளிகள் வரை உயர இருக்கிறது. ஒரு வருட டெர்ம் டெபாசிட்டுகளுக்கு இப்போது 6.6% வட்டியும், 2 மற்றும் 3 வருட டெபாசிட்டுகளுக்கு 6.8%, 6.9% வட்டியும் கிடைக்கும். எனினும் 5 வருட டெர்ம் டெபாசிட்டுகளின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் வட்டி விகிதமானது தொடர்ந்து 5.8 சதவீதம் ஆகவே இருக்கிறது.