சென்னையில் இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை முதல் சென்னையில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதன் பிறகு சென்னை மாநகராட்சியில் 209 கிலோமீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 161 கிலோமீட்டர் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 48 கிலோமீட்டர் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

மழைக்காலங்களில் பாதிக்கப்பட்ட சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. கழிவு நீரில் குடிநீர் கழிப்பதை தடுப்பதற்கும், தெரு நாய்கள் பெருகுவதை தடுப்பதற்கும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா குறித்து ஆயுஷ் அமைச்சகம் கேட்டுள்ள விளக்கத்துக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் விளக்கம் அனுப்பி வைக்கப்படும். மேலும் வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னையை மீட்டெடுப்பதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளையும் வருகிற 31-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்த இருக்கிறார் என்று தெரிவித்தார்.