1973 ஆம் ஆண்டு கே பாலசந்தர் அவர்கள் மூலம் தமிழ் திரை உலகில் பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு. இவர் திரையுலகில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்து பாபு நேற்று உயிரிழந்தார்.

இவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் நிலையில் ரஜினிகாந்த் கருப்பு உடையில் அஞ்சலி செலுத்த வந்துள்ளார். ரஜினிகாந்த் அவர்களும் சரத்பாபுவும் இணைந்து நடித்த முத்து அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் என்றும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பவை ஆகும்.

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் பேசுகையில், “திரை உலகிற்கு வரும் முன்பே சரத் பாபுவை எனக்கு நன்றாக தெரியும். அவர் மிகவும் அருமையான மனிதர், நல்ல நண்பர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கக்கூடியவர். அவரை இதுவரை கோபமாக நான் பார்த்ததில்லை.

உங்கள் எல்லோருக்கும் தெரியும் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டானது என்று. என் மீது அதிக அன்பு கொண்டவர், நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து எப்போதும் வருத்தப்படுவார். உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம், ரொம்ப நாள் நீ வாழ வேண்டும் என்று கூறுவார். இப்போது அவர் இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.