சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆவண கொலை செய்யப்பட்டதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது முக்கிய சாட்சியான சுவாதியிடம் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பிய போது சுவாதி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு பிறழ் சாட்சியம் அளித்தார். இதனால் சுவாதி மீது நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்த நிலையில் இன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது சுவாதி கர்ப்பமாக இருந்ததால் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவருக்கு பதில் சுவாதியின் கணவர் வந்திருந்தார். இந்நிலையில் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் போன்றவற்றில் பொய் சாட்சி கூறியதோடு பிறழ் சாட்சியாக மாறி நீதிமன்றத்தை சுவாதி தவறாக வழி நடத்தியதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து அதற்கான மெமோவை சுவாதியின் கணவரிடம் நீதிபதிகள் வழங்க உத்தரவிட்டனர். மேலும் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீடுதாரர்களின் தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.