ஈரோடு கிழக்கில் வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கில் வேட்பாளர்கள் எல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். அதிமுகவின் நலன் கருதி ஓ. பன்னீர்செல்வம் வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்ட நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கிடைத்துள்ளது. இதற்கான ஏ மற்றும் பி படிவத்தில் அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன் தலைமையில் இன்று காலை ஈரோடு கிழக்கில் அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கினர்.

இவர்கள் மணல்மேடு பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை குபேர மூலையில் இருந்து தொடங்கியுள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கில் வெற்றி என்பது அதிமுகவுக்கு தான் என்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லியுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அதிமுகவினர் பலர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதோடு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக விரும்புவதாகவும் தெரிவித்தனர்.