தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் ஜோதிப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் துணி வியாபாரியான செல்வகுமார் என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் ஜோதிப்பிரியாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு வேறொரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். அதன்படி திருமணம் நடைபெறுவதற்கு இரு வாரங்கள் இருந்த நிலையில் திருமணத்தில் விருப்பமில்லாத ஜோதி பிரியா தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இவர்கள் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தன் மகளை காணாததால் பெற்றோர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட ஜோதிப்பிரியாவும் அவருடைய காதல் கணவரும் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். அதன் பிறகு இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் ஜோதிப்பிரியாவை காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர். மேலும் திருமணம் நின்றதால் பெண் வீட்டாருடன் மாப்பிள்ளை வீட்டார் தகராறு செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.