இந்திய வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி  20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை குவித்தது.

அதிகபட்சமாக தீபக் ஹூடா 23 பந்துகளில் (4 சிக்ஸ், ஒரு பவுண்டரி) 41* ரன்களும், இஷான் கிஷன் 29 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். மேலும் அக்சர் படேல் 31* (20) ரன்களும்,  ஹர்திக் பாண்டியா 29 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் தீக்ஷனா, மதுஷங்கா, கருணாரத்னே, தனஞ்செய டி சில்வா, ஹசராங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக பந்துவீச்சில் சிவம் மாவி 4 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த போட்டியில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கேப்டன் தசுன் ஷானகா 16 வது ஓவர் முடியும்போது அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து ஆட்டத்தின் 17 ஆவது ஓவரை உம்ரான் மாலிக் வீசினார்.. அந்த ஓவரின் முதல் பந்தில் ஷானகா ரன் அடிக்கவில்லை. 2ஆவது பந்தில் சிக்ஸ் அடித்தார். 3ஆவது பந்தில் ரன் எடுக்கவில்லை. தொடர்ந்து 4ஆவது பந்தில் அவர் அடிக்க முயன்று சாஹலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். உம்ரான் மாலிக் வீசிய அந்த பந்து 155 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. இதில் இந்த போட்டியின் மிக வேகமான பந்தாகவும் இருந்துள்ளது.

ஷானகா 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உம்ரான் மாலிக் வேகமாக வீசி அவரை ஆட்டமிழக்க செய்து வெளியேற்றியுள்ளார். இதன் மூலம் உம்ரான் மாலிக் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் அதி வேகமாக பந்து வீசிய ஜஸ்பிரிட் பும்ராவின் சாதனையை தற்போது தகர்த்துள்ளார்.

இதுவரையில் அதிவேகமாக பந்து வீசிய இந்திய வீரர்கள் : 

ஜஸ்பிரிட் பும்ரா – 153.36 கிலோ மீட்டர்

முகமது ஷமி – 153.3 கிலோ மீட்டர்

நவ்தீப் சைனி – 152.85 கிலோ மீட்டர்