ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் உட்கட்சி பூசலில் தவித்து வரும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து போட்டி வரும். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் பிப்ரவரி மாதம் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் எடப்பாடி தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் கண்டிப்பாக சின்னம் தொடர்பாக பிரச்சனை வரும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பாளரை முடிவு செய்து விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் தென்னரசு ஆகிய இருவர்களில் யாரையாவது ஒருவரை வேட்பாளராக நியமிப்பதற்கு எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவை பொருத்தவரை சின்னம் தொடர்பான பிரச்சனை வரும் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் தனித்தனியாக போட்டியிடும் போது யாருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.