இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நாளை தொடங்குகிறது..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 23 (நாளை) முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரில் இரு அணிகளிலும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மூத்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஷமி உட்பட கிட்டத்தட்ட உலக கோப்பையில் ஆடிய அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது, இதில் இந்தியாவை வீழ்த்தி 6வது முறை சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் நவம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது. இடையில் 3 நாட்கள் மட்டுமே ஓய்வு இருக்கிறது. ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் இருந்து வரும் டி20 தொடருக்கு 7 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சீன் அபோட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் அடங்குவர்.

இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 2வது டி20 போட்டி நவம்பர் 26 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், 3வது டி20 போட்டி 28ஆம் தேதி கவுகாத்தியிலும், 4வது டி20 போட்டி டிசம்பர் 1ம் தேதி ராய்பூரிலும், 5வது டி20 போட்டி டிசம்பர் 3ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா டி20 அணி :

மேத்யூ வேட் (கே), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ்,
கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.

இந்திய டி20 அணி :

சூர்யகுமார் யாதவ் (கே), ருதுராஜ் கெய்க்வாட் (து.கே), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (வி.கீ), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார், ஷ்ரேயாஸ் ஐயர் (கடைசி 2 போட்டிகள் மட்டும்)