தமிழக சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையை விட்டு கஅக்ட்சியின் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  இந்த புதிய சட்ட திருத்த மசோதா தொழிலாளர்களின் விருப்ப தேர்வாக இருக்கும் எனவும், இது கட்டாயம் அல்ல எனவும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சிவி கணேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் மசோதாவுக்கு அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 8 மணி நேரம் வேர்வை சிந்தி உழைப்பவர்களை மேலும் 4 மணி நேரம் உழைக்கச் சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மே தினம் நெருங்கும் நேரத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை முன்வைத்து திமுக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த புதிய சட்ட மசோதாவுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.