லோகேஷ் கனகராஜ் இயக்கி அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரக்கூடிய லியோ திரைப்படத்தின் வெற்றி விழா விழா இன்று மாலை பெரிய மேடுவில் இருக்கக்கூடிய நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த வெற்றி விழாவை நேரில் பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் மதியம் ஒரு மணி முதலே நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்பு குவியத் தொடங்கினர்.

விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் போது ஆடியோ லாஞ்ச் விழாவில் விஜய் சொல்லக்கூடிய குட்டி ஸ்டோரி திரைப்படத்துறையிலும்,  அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும்  அந்த வகையில் இன்று நடைபெறக்கூடிய லியோ வெற்றி விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.

எனவே இந்த வெற்றி விழாவை பார்ப்பதற்காக ரசிகர்களும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளும் மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.   நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக  நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றி சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் அனுமதியை பொருத்தவரை மொத்தம் 5 கேட் வழியாக ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். விஐபி உள்ளே செல்வதற்கு ஒரு வழி, அதேபோல ரசிகர்கள்,  விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்வதற்கு வழி என தனித்தனியாக ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அனுமதிக்க அவர்களுக்கு கோல்ட், சில்வர், பிளாட்டினம் என பாஸ் என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பாஸ் எடுத்துட்டு வருபவர்களுக்கு,  ரசிகர்கள் விஜய் மக்கள் மன்ற அடையாள அட்டை,  ஆதார் அட்டை என்ற மூன்றையும் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டடு வெற்றி விழா தொடங்கியது.

 

இதில் பேசிய நடிகர் விஜய், 20 வயசுல ஒரு பொண்ணு ஹீரோயின் ஆகுறது பெரிசில்ல.. 20 வருஷமா வெற்றிகரமா ஹீரோயினா இருக்குறதுதான் பெரிசு.. நம்ம இளவரசி குந்தவை என திரிஷாவை பற்றி பேசிய நடிகர் விஜய்,  எதிர்காலத்துல என்ன நல்லது நடந்தாலும், அது நம்ம பசங்களால தான் இருக்கணும்.

இத்தனை நாட்களாக, என் இதயத்தில் உங்களை எல்லாம் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, உங்கள் அனைவரின் இதயங்களிலும் நான் இருப்பதை நான் உணர்கிறேன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு உங்கள் இதயத்தில் இடம் தந்ததற்கு நன்றி. இதுக்கு நான் என்ன செய்ய போறேன்? என் தோலை காலுக்கு செருப்பா தைச்சு போட்டா கூட போதாது சாகுற வரை நீங்க கொடுத்த ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக இருப்பேன் என தெரிவித்தார்.