சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்படுகிறது. தற்போது கிளாம்பாக்கத்தில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த பேருந்து நிலையத்துக்கு கலைஞரின் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புறநகர் ரயில்வே நிலையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது புறநகர் ரயிலில் செல்பவர்கள் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி சுமார் 2 கிலோமீட்டர் நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாகத்தான் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில்வே நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி கொடுத்துள்ளது. மேலும் புறநகர் ரயில்வே நிலையம் அமைப்பதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்ட பிறகு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.