தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பொது மக்களுக்கு வேண்டிய நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஜய். தற்போது அரசியலில் கால் பதிக்கும் முயற்சியில் நடிகர் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார். அண்மையில் புஸ்ஸி ஆனந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு அம்பேத்கர் பிறந்த தினத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட வாரியாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரங்களை சேகரிக்க மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நிர்வாகிகள் ஒவ்வொரு தொகுதி வாரியாக வாக்காளர் விவரங்களை திரட்டி வருவதோடு, மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட்டால் தொகுதி வாரியாக எத்தனை வாக்குகளை பெற முடியும் என்ற விவரத்தையும் சேகரித்து வருகிறார்கள். மேலும் விஜய் தற்போது தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதால் வருகின்ற சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை விஜய் மட்டும் அரசியலில் கால் பதித்தால் கண்டிப்பாக தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.