பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் கராச்சி நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்துள்ளார். இதற்கு பின் இருவரும் சேர்ந்து கராச்சி நகரில் வாழ்ந்து  வந்த நிலையில், அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை  மருத்துவர் ஒருவர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து கராச்சியில் உள்ள நீதிமன்றத்திற்கு அந்த இளம்பெண் நேற்று முன்தினம் சென்ற போது, அங்கு வந்த அவரின் தந்தை  நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே பெற்ற மகள் என்றும் பாராமல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவரும் காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து தந்தையே மகளை ஆணவக்கொலை செய்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு  சராசரியாக 650 ஆணவக்கொலைகள் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.