தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பின் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த வருடம் அக்டோபர் 28ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

பல தினங்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று தமிழக அரசுக்கு திருப்பியனுப்பினார். ஆளுநரின்  இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தினை தெரிவித்தனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நாளை பேரவையில்  மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார். அதோடு மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விக்கு அரசியல் விளக்கத்தையும் அவர் கொடுக்க உள்ளார்.