பணத்தை மேம்பாலத்தில் நின்று ஒருவர் வீசிய சம்பவமும், அதை எடுபதற்காக பொதுமக்கள் போட்டி போட்ட நிகழ்வும் பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் அரங்கேறியது. கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் கோர்ட் சூட் அணிந்து டிப்டாப் ஆக ஆசாமி ஒருவர் நின்றிருந்தார். இதையடுத்து அவர் தன் தோளில் போட்டிருந்த பையிலிருந்து கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து மேம்பாலத்தின் மீது இருந்து மார்க்கெட் சாலையின் இடதுபுறம் வீசினார்.

அப்போது சாலையில் நடந்து சென்றவர்கள் அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்தனர். இதனால் கே.ஆர்.மார்க்கெட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையில் காவல்துறையினர் வருவதை பார்த்ததும் டிப்-டாப் ஆசாமி அங்கு நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.

அதன்பின் காவல்துறையினர்  விசாரணையில் மேம்பாலத்திலிருந்து பணத்தை வீசியவர் பெங்களூரு நாகரபாவியை சேர்ந்த அருண் என்பதும், இவர் தொழிலதிபர் என்பதும் தெரியவந்தது. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருவதுடன், வி டாட் 9 நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயலதிகாரி என்பதும் தெரியவந்தது. ஆனால் எதற்காக மேம்பாலத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வீசினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருணை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.