டெல்லியில் வசித்து வரும் ஒரு தம்பதி குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அதன் பிறகு மனைவி வெளியூர் சென்றிருந்த நேரத்தில் கணவர் வீட்டில் இருந்த தங்க நகை உட்பட அனைத்து பொருட்களையும் மனைவிக்கு தெரியாமல் எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக கணவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் திருமணத்தின் போது பெண்ணுக்கு வழங்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் அந்த பெண்ணுக்கு மட்டும் தான் சொந்தம் என்றும், அதில் உரிமை கொண்டாட கணவருக்கோ அல்லது  கணவரின் குடும்பத்தாருக்கோ உரிமை கிடையாது என்று கூறினார்கள்.

அதோடு மனைவியின் அனுமதியின்றி தங்க நகைகள் உட்பட அனைத்து பொருட்களையும் விற்க மற்றும் அடகு வைக்கவும் கணவர் உட்பட குடும்பத்தாருக்கு உரிமை கிடையாது என்றும் நீதிபதிகள் கூறினார்கள். மேலும் திருமணமான பெண்ணை வீட்டை விட்டு வெளியேற சொல்ல கணவருக்கு அனுமதி கிடையாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.