உலக காசநோய் விழிப்புணர்வு தினம் மார்ச் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. காச நோயைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில் வரவேண்டும் என்பதற்காக உலக காசநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. காசநோய் மற்ற கிருமிகளை போன்று உடனடியாக நோய் தாக்கத்தை ஏற்படுத்தாது. மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது எளிதாக பாக்டீரியாக்கள் தாக்கி நோயை உண்டாக்குகிறது. குறிப்பாக காசநோய் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக தாக்குகிறது.

இந்நிலையில் 2 வாரத்திற்கு மேல் மாலை நேர காய்ச்சல், இருமல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல் மெலிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக காச நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காசநோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறாவிட்டால் அந்த நோய் உடல் முழுவதையும் ஆக்கிரமித்து கடைசியில் உயிரையே பறித்து விடும். எனவே காசநோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி உரிய முறையில் சிகிச்சை எடுத்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டால் நோயை முழுமையாக குணப்படுத்தலாம். மேலும் இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்பின் மூலமாக காசநோயை ஒழித்திடுவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.