சென்னை தீவு திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (நிமோனியா) காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 06:10 மணிக்கு காலமானார்.

இதையடுத்து சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து விஜயகாந்த் உடல் வடபழனி வழியாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்படுள்ளது. மேலும் சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நாளை மாலை 04:45 மணிக்கு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் டி. ராஜேந்திரன், நடிகர் கவுண்டமணி, கவிஞர் வைரமுத்து, மன்சூர் அலிகான், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், மாரி செல்வராஜ், அர்ஜுன், விஜயகுமார், விஜய் சேதுபதி, ஆனந்த் ராஜ், கருணாஸ், ஷாம், விமல், பவர் ஸ்டார், கூல் சுரேஷ், நடிகை அபிராமி, கோவை சரளா, குஷ்பூ, நமீதா, கவிதா, கவுதமி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேபோல விஜயகாந்த் அவர்களுக்கு திருநாவுக்கரசர், முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், அமைச்சர் உதயநிதி, துரை வைகோ, அமைச்சர் பொன்முடி, எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை தீவு திடலில் நாளை வைக்கப்படுகிறது. நாளை காலை 6:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தீவு திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது என தேமுதிக அறிவித்துள்ளது.. தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணிக்கு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்படும். சென்னை பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமையகம் வரை இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது என தேமுதிக தெரிவித்துள்ளது. பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.