தமிழக சட்டப்பேரவையில் நேற்று 12 மணி நேர வேலைமசோதா எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த 12 மணி நேரம் வேலை  மசோதாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளர்களின் வேலை நேர மசோதாவை எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றியதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 150 ஆண்டு காலம் போராடி பலர் உயிர் துறந்து குடும்பத்தை இழந்து பெற்ற உரிமைகளை எந்த காரணத்தை கொண்டும் இழக்க முடியாது. இந்த மசோதா சட்டமாகக்கூடாது. இதில் சிபிஎம் கட்சி உறுதியாக இருக்கிறது. தொழிலாளர்களின் 12 மணி நேர வேலை மசோதா சட்டமாக கூடாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் தொடர்ந்து போராடும். மேலும் இந்த மசோதாவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.