தமிழகத்தில் நடைபாண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கிய இந்த தேர்வு ஏப்ரல் 20ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வில் கேள்வித்தாளில் குளறுபடி இருப்பதால் மூன்று மதிப்பெண்கள் வழங்கும்படி தேர்வு துறைக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

கேள்வி எண் 4,5,6 இல் கேள்வி மற்றும் விடைகள் குளறுபடியாக உள்ளது. இதனால் அந்த மூன்று கேள்விகளுக்கும் மூன்று மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலித்து விரைவில் விளக்கம் தரப்படும் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் தவறாக இருந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் மூன்று மதிப்பெண் கூடுதலாக வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.