கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பொம்ம சந்திரா வரை இயங்கி வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் வெகு நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இது தொடர்பாக நான் மத்திய அரசுக்கும், கர்நாடகா முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தேன்.

இதன் பலனாக தற்போது ஓசூரில் மெட்ரோ ரயில் சேவைகளை மேற்கொள்வதற்கான ஆய்வுகளை நடத்த ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. கர்நாடகா முதல்வரும் ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி கொடுப்பதாக கூறி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதன் பிறகு தமிழக அரசும் ஓசூர் மெட்ரோ ரயில் சேவைக்காக 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறியுள்ளது. மேலும் ஓசூரில் விரைந்து ஆய்வு பணிகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நான் கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார்.