2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு நாளை (ஜன.,13) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பரிசு தொகுப்புகளை மக்கள் நாளையும் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 2வது வெள்ளிக் கிழமை விடுமுறை விடப்படும். ஆனால், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது காரணமாக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொகுப்பு வாங்காதவர்கள், இதை பயன்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.