ரயில் பயணம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும் அதில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களும் இருக்கிறது. இதுபற்றிய புரிதல் அனைத்து பயணிகளுக்கும் இருத்தல் வேண்டும். இல்லையெனில் கடும் அபராதத்துடன் சிறை தண்டனையையும் சந்திக்க வேண்டி இருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்களை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம். ரயிலில் பயணத்தின்போது ​​தெரியாமல் கூட அதன் மேல் கூரையில் பயணம் செய்ய முயற்சிக்காதீர்கள். அப்படி செய்தால் ரயில்வே சட்டம் பிரிவு 156ன் கீழ் உங்களுக்கு ரூ.500 அபராதம் (அ) 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இதையடுத்து நியாயமான காரணம் இன்றி ஓடும் ரயிலில் அலாரம் செயினை இழுப்பது சட்டவிரோதமானது ஆகும். ரயில்வே சட்டம் பிரிவு-141ன் கீழ் இதற்கு 1000 ரூபாய் அபராதம் (அ) ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம். இதுதவிர ரயிலில் எந்த வகையான போஸ்டர், துண்டு பிரசுரம் (அ) பேனர் வைப்பது ரயில்வே சட்டத்தின் (இந்திய ரயில்வே விதிகள் மற்றும் தண்டனை) பிரிவு 166-ன் கீழ் குற்றமாகும். அப்படி செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை (அ) ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.