பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 2582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த கட்டாய தமிழ் தேர்வு புயல் மழை காரணமாக பிப்ரவரி நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தமிழ் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிரதான தேர்வுக்காக அனுமதிக்கப்படுவர் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இதையடுத்து தமிழ் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களே பிரதான தேர்வு அனுமதி என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்களுக்கு விலக்களிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என ஐ கோர்ட் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் தேர்வில் மனுதாரர்கள் பங்கேற்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது தேர்வு நடைமுறைகளை பாதிக்கும் என்றும், தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது ஹை கோர்ட்..