தமிழ்நாட்டில் பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு ரூ. 30,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவம் தவறிய கனமழையால் ஏராளமான அளவுக்கு பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பற்ற முறையில் நெல் மூட்டைகள் இருப்பதால் மழையில் நனைந்து வீணாகிறது.

நெல் ஈரப்பதம் 19% மேல் அதிகரித்ததை காரணம் காட்டி நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக நிறுத்தி வைத்துள்ள தமிழக அரசுக்கு என்னுடைய கண்டனங்கள். அதன் பிறகு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி நெல் கொள்முதல் தரத்தினை நிர்ணயிக்கும் உரிமையை மாநில அரசுகள் பெற ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை போதுமானதாக இல்லாததால் 30000 இழப்பீடு வழங்க சீமான் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.