திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலரான தர்மா ரெட்டி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது,  “திருப்பதியில் தரிசனத்துக்கு வரக்கூடிய சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 50, 100 குறைந்த வாடகையில் அறைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென திருப்பதி மற்றும் திருமலையில் 7,500 அறைகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த அறைகள் ஒவ்வொன்றும் ரூ.120 கோடியில் வெந்நீர் மற்றும் பர்னிச்சர் வசதியுடன் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.  எனினும் வாடகை உயர்த்தப்படவில்லை. அதே நேரம் நாராயணகிரி எஸ்பிஆர்எஸ் சிறப்பு ஓய்வு இல்லங்கள் நவீனப்படுத்தப்பட்டு விஐபி பக்தர்களுக்கு வாடகை உயர்த்தி வழங்கப்படுகிறது. நாராயணகிரி கட்டிட வளாகத்திலுள்ள அறைகள் உள்பட 172 அறைகள் அண்மையில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது.

அதில் தற்போது வாட்டர் ஹீட்டர், தரமான கட்டில், மெத்தை, ஏர் கண்டிஷன் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவற்றின் வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு சிலர் தேவஸ்தானத்தின் இம்முடிவை தவறு என விமர்சித்து வருகின்றனர். அதே நேரம் சாதாரண பக்தர்களின் தங்கும் அறை வாடகையை உயர்த்தவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.