தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வு வயதை 58ஆக குறைக்க அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதானது 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது கொரோனா காரணமாக நிதிநிலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய பலன்களை அரசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதை கருத்தில் கொண்டு ஊழியர்களுடைய ஓய்வு பெறும் வயதானது உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஊழியர்களுடைய ஓய்வு பெறும் வயதானது 59ல் இருந்து 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு பார்வைக் கோளாறு, முதுகு வலி ஆகியவை ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் ஆய்வுசெய்து முடிவெடுப்பார் என அமைச்சர் கூறியிருக்கிறார்.