தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு வழி காட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு வழி காட்டுவதற்காக இன்று முதல் கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரத்தியேகமாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், டிப்ளமோ, கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்க கூடிய வேலை வாய்ப்புகள் போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும்.

அதோடு பள்ளிகளிலும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உயர்கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதன்படி இந்த நிகழ்ச்சி இன்று சேலம், நெல்லை, மதுரை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை திண்டுக்கல், மயிலாடுதுறை, தர்மபுரி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், வருகின்ற மே 10-ம் தேதி கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தேனி, கடலூர், அரியலூர், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற இருக்கிறது. மேலும் மே 11 ஆம் தேதி திருப்பத்தூர், தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், தஞ்சாவூர், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், மே 13 ஆம் தேதி ராணிப்பேட்டை, நாமக்கல், தென்காசி, கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.