தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் விலைவாசி குறைவு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ரேஷன் கடைகளில் காய்கறி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகத்தின் மூலமாக கொள்முதல்களை மேற்கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருள்கள் பதுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிமை பொருள் காவல் துறையினர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காலம் போல நடமாடும் காய்கறி கடைகளை மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை மூலம் தொடங்கலாம் எனவும் துறை அதிகாரிகள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.