இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இணையதளத்தில் பண மோசடி செய்து வரும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வகை யுக்தி ஒன்றை கையாண்டு வருகிறார்கள். உங்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப்பிற்கு ஒரு லிங்க் உடன் தகவல் அனுப்புகிறார்கள். அதில் நீங்கள் வேலை தேடும் நபர் என்பதை அறிகிறோம், எங்கள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது அதில் உங்களுக்கு பணியாற்ற விருப்பம் இருந்தால் வீட்டில் இருந்தபடியே தினமும் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது.

இந்த லிங்கை தொட்டால் telegram செயலியில் உள்ள குழுவில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். அதன்பிறகு எங்கள் நிறுவனத்தில் இணைந்ததற்கு நன்றி நாங்கள் பதினைந்து வகையான மிகவும் எளிதான டாஸ்க்களை தருகிறோம் அதில் வெற்றி பெற்றால் 30 சதவீதம் கமிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்பணமாக 500 ரூபாய் வரை வங்கி கணக்கிற்கு அனுப்புகிறோம் எனவும் உங்கள் வங்கி கணக்கு ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்ட விவரங்களை அனுப்பும்படி கேட்கிறார்கள். அதன் பிறகு ஆயிரம் ரூபாய் செலுத்துங்கள் கமிஷன் தொகையுடன் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி முன்பணம் கொடுத்த பிறகு உங்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டி விட்டு தொடர்பை துண்டித்து விடுவார்கள்.

இந்த மோசடி அதிக அளவு பெண்கள் மற்றும் வேலை தேடும் வரை குறி வைத்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பல மோசடி தொடர்பாக உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.