இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர்  சூழல் நிலவி வரும் நிலையில், ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், பாலஸ்தீனிய தீவிரவாதிகள் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகேரி தகவல் தெரிவித்துள்ளார். தெற்கு இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய தீவிரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது. ஏராளமான பாலஸ்தீனிய தீவிரவாதிகளை பிடித்து வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புனித தலமான ஜெருசலேமிற்கு தற்போது செல்வது பாதுகாப்பாக இருக்காது என்பதால் அமைதி திரும்பும் வரை புனித பயணம் செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள 30 தமிழர்களை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. இஸ்ரேலில் பதற்றம் சற்று தணியும்போது தமிழர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.