அமெரிக்க நாட்டை ஆற்றல் மிக்க பனிப்புயல் தாக்கியுள்ளது. இந்த பனிப்புயலால் மிச்சிகன், இலினாய், நியூ மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் ஐந்து மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில் உறைபனி அதிக அளவில் படர்ந்துள்ளதால் வாகன போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்டிடங்கள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் பணியால் மூடப்பட்டுள்ளது.

மேலும் மணிக்கு 97 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த குளிர் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். குறிப்பாக மினியாபொலிஸ் நகரத்தில் சுமார் 20 அடி அங்குலம் அளவுக்கு உறைபனி கொட்டியுள்ளது. இதனை அடுத்து செயின் பால் மினியாபொலிஸ் ஆகிய நகரங்களில் பனிபுயல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலையில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறு வாகன ஓட்டிகளுக்கு அந்தந்த மாகாணத்தின் அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த கடுமையான பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் ஐந்து மாகாணங்களில் உள்ள விமான நிலையங்களில் சுமார் 3500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கடுமையான பணி புயல் காரணமாக சில பகுதிகளில் சாலைகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் தற்காலிகமாக மின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு சமவெளி பகுதிகளில் கடுமையான குளிரை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.