ஐபிஎல் இறுதிப்போட்டியில் இருந்து சென்னை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் வெளியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது..

லண்டன் லார்ட்ஸில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்காக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இறுதிப் போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகுவார் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. ஐபிஎல் 2023 மார்ச் 31 முதல் மே 28 வரை நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும், டெஸ்ட் அணியின் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் இறுதிக்கட்டத்தில் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. அயர்லாந்துக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும்  விதமாக அவர் விலகலாம் என கூறப்படுகிறது.

ஆஷஸ் தொடருக்கு முன் இங்கிலாந்தின் கடைசி டெஸ்ட் இதுவாகும். இது ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு 4 நாட்களுக்குப் பிறகு ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், ஹாரி புரூக், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் நீண்ட கால கேப்டன் எம்.எஸ். தோனி இந்த ஐபிஎல் சீசனோடு கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற உள்ளார். அவரது கடைசி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அவருக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கேவை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தொடரின் கடைசி கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் வெளியேறுவார் என கூறப்படுகிறது. ஆனால் அதிகார்வப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.. இருப்பினும் இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

மார்ச் 31 ஆம் தேதி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை ஐபிஎல் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது..