தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிமுக ஆட்சி காலத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயன்பெற்றனர். இந்நிலையில் தற்போது திமுக அரசு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக அம்மாவால் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தை திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்திவிட்டது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கும் நிலையில் இந்த வருடமாவது திமுக அரசு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குமா? இந்த ஆண்டிற்கான லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்து திமுக அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. இந்த வருமாவது இலவச லேப்டாப்புக்காக காத்திருக்கும் மாணவர்களின் கனவை திமுக அரசு நிறைவேற்றுமா..? இல்லையெனில் அதிமுகவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற காழ்புணர்ச்சியால் கடந்த வருடத்தை போன்று ஏதேனும் நொண்டி சாக்கு சொல்லப் போகிறீர்களா என்று கூறியுள்ளார்.