கர்நாடகாவில் வருகின்ற மே பத்தாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தடவைகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வரி வசூலில் கர்நாடகாவுக்கான பங்கை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மேலும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம், விவசாய கடன் 3 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, டிப்ளமோ முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.