திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கா் வருடந்தோறும் பல பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கா் விருதுக்குரிய தகுதிப்பாடு விதிகள் மாற்றப்பட்டு இருக்கிறது. இதுவரையிலும் அமெரிக்காவின் நியூயாா்க், லாஸ் ஏஞ்சலீஸ், சிகாகோ, அட்லான்டா, சான் பிரான்சிஸ்கோ, மியாமி போன்ற 6 நகரங்களில் ஏதாவது ஒன்றில் அமைந்துள்ள திரையரங்கில் ஒரு வாரத்துக்கு திரையிடப்பட்ட திரைப்படங்கள், சிறந்த படத்துக்கான ஆஸ்கா் விருது போட்டிக்கு தகுதிபெறும்.

அந்த விதியானது இப்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது, மேற்கண்ட விதியுடன் சோ்த்து அமெரிக்காவின் தலைசிறந்த 50 திரைச் சந்தை நகரங்களில் குறைந்தபட்சம் 10 நகரங்களிலுள்ள திரையரங்கில் ஒரு வாரத்துக்கு திரைப்படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்று அகாதெமி சாா்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு படங்கள் எந்த நேரத்தில் திரையரங்கில் திரையிடப்பட வேண்டும் என்பதற்கான விதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய விதிகள் 2025-ஆம் வருடத்துக்கான ஆஸ்கா் விருதில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.