தொழில்நுட்பம் வளர வளர நம்முடைய பழக்கவழக்கங்களும் மாறி விட்டது. சமைப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட எல்லாமே மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்தவகையில் நாம் சமைக்கும் பாத்திரங்களும் வித்தியாசமாகிவிட்டது. நம்முடைய முன்னோர்கள் பல வருடங்களாக மண் பானையில் சமைத்து வருவதோடு மட்டுமல்லாமல் மண் பானையில் வைத்து தண்ணீர் குடிப்பது போன்ற பலவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.

மண் பாத்திரங்களில் சமைப்பது உணவின் சுவையை அதிகரிக்கும். காய்கறிகள் அல்லது கீரைகள் மண் பாத்திரத்தில் சமைக்கும் போது ஊட்டச்சத்துக்களை தக்கவைத்துக் கொள்கிறது. இதில் ரசாயன எதிர் வினைகள் எதுவுமே நடைபெறாது. அலுமினியம் உள்ளிட்ட பாத்திரங்களை விட ஒரு மண் பானையில் நாம் சமைக்கும் பொழுது குறைந்த அளவில் எண்ணெய் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும் இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.