உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மொத்தம் மூன்று அடுக்குகளாக அமைகிறது. இதன் தரைதளத்தில் தான் ஐந்து வயது குழந்தையின் வடிவில் உள்ள ராம் லல்லாவின் சிலையை கர்ப்ப கிரகத்தில் வைக்க இருக்கிறார்கள். இந்த சிலை 51 இன்ச் உயரம் கொண்டது. கருப்பு நிற கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கவர்ந்திழுக்கும் விதமாக சிலையை வடித்துள்ளார்கள். தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் உள்ளது. கும்பாபிஷேகத்திற்காக 700க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் வருகை புரிவார்கள்.

இவர்களுடைய வசதிக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 வயது ராம் லல்லா சிலை கற்பகிரகத்தில் அறிவியல் பூர்வமான கணக்கீடுகளுடன் குறிப்பிட்ட உயரத்தில் வைக்க இருக்கிறார்கள். இதற்காக பிரபல விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆலோசனைகளை பெற்றுள்ளார்கள். அவர்களுடைய அறிவுறுத்தலின் பேரில் ராம் லல்லா சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அதாவது வருடம்தோறும் சித்திரை மாதத்தின் முதல் வாரத்தில் ராமநவமி கொண்டாடப்படும். ராமரின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வார்கள். நடப்பாண்டில் பொறுத்தவரை ஏப்ரல் 17 அன்று ராம நவமி வருகிறது. அன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் சூரியனின் வெளிச்சம் ராம் லல்லா சிலை நெற்றியில் பட வேண்டும். அதற்கு ஏற்ப குறிப்பிட்ட உயரத்தில் சிலை வைக்க முடிவு செய்துள்ளார்கள். அதாவது ராமருக்கு சூரியனே அபிஷேகம் செய்வதாக பொருள் கொள்ளப்படுகிறது. இதற்காகத்தான் விஞ்ஞானிகளிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.