கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சி பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட உத்தரவிட்ட கர்நாடக துணை முதல்வர் அவர்களுக்கும், இப்ப பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கும் கடும் கண்டனங்கள். காவிரி நதிநீர் என்பது டெல்டா மாவட்ட மக்களின் அடிப்படை உரிமை. காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து இலங்கையில் பல லட்சம் மக்கள் மடிவதற்கு காரணமாக இருந்ததுபோல், இங்குள்ள காவிரி படுகை விவசாயிகளையும், காவிரி நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட மக்களையும் இந்த திமுக அரசு வஞ்சிக்க பார்க்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே இந்த ஆட்சியாளர்கள் கையில் ஆகாதவர்கள் என்பதை உணர்ந்த அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை பாலைவனமாகும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பை ஏற்ற ஒரே வாரத்தில் அனைத்து தடைகளையும் தகர்த்து மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பொங்குவதன் ரகசியம் என்ன. தமிழக ஆட்சியாளர்களுக்கு கர்நாடகாவில் பல்வேறு தொழில்கள் இருப்பதால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற நோக்கத்தோடுதான் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார்களா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் தமிழகம் வறண்ட பாலைவனம் ஆகாமல் தடுக்க அதிமுக கட்சியின் சார்பில் அனைத்து விதமான போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.